வியர்க்குரு:

கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வசாதாரணமாக 40-லிருந்து 45 -டிகிரி என அதிகமாகும் போது உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.
இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குருவில் காலமின் லோஷனை பூசினால் அரிப்பு குறையும்.
வேனல் கட்டி:

தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்ற கழிவுகள் சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்கு போல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள, அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான் வேனல் கட்டி. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
பூஞ்சை தொற்றுகள்:

உடலில், ஈரமுள்ள பகுதிகளான அக்குள், கழுத்து, முதுகு, தொடை இடுக்குகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். படையைக் குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரைத் தடவிவர இது குணமாகும். உள்ளாடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
நீர்க்கடுப்பு:

கோடையில் சிறுநீர் கடுப்பு பெரும் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காத போது நீர் கடுப்பு வரும். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும் போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் உப்புப் படிகங்களாக படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறையத் தண்ணீர் குடிப்பது மட்டுமே இதற்கான தீர்வு.







