
மாரடைப்பு என்றாலே பயமும் , பதட்டமும் ஒன்று சேர வரும். ஆனால் பதட்டமடையாமல் நமக்கு நெஞ்சு வலி வந்தாலோ , நம்மை சேர்ந்தவர்களுக்கு வந்தாலோ உடனடியாக “கோல்டன் ஹவர்”, எனப்படும் நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்காகவாது மாரடைப்புக்கான அறிகுறிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாரடைப்புக்கான அறிகுறிகள்
சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு (Myocardial infarction).
தூண்டும் சூழல்கள்
இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன. அவை: பரம்பரை, அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலையால் திடீரெனத் தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது ((எ-டு ) மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (( எ-டு ) கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை).
யாருக்கு அதிக வாய்ப்பு?
புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

பரிசோதனைகள் என்ன?
வழக்கமான ரத்தப் பரிசோதனை களுடன் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்படும். இவை தவிர, மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., எக்கோ, சி.டி. ஸ்கேன், டிரெட்மில், எண்டாஸ்கோபி போன்ற பரிசோதனைகளும் தேவைப்படும். இவற்றின் மூல காரணம் அறிந்து, சிகிச்சை பெற்றுவிட்டால் நெஞ்சு வலி விடைபெற்றுக்கொள்ளும்.
இதய வலிக்கு முதலுதவி
இதய வலி அல்லது மாரடைப்புக் கான அறிகுறிகள் தெரியவரும்போது உடனடியாக ஆஸ்பிரின் 325 மி.கி., அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி., குளோபிடோகிரில் 150 மி.கி. ஆகியவற்றைச் சாப்பிட்டால், தமனி ரத்தக் குழாயில் ரத்தம் உறைவது தடுக்கப்படும். இதன் பலனாக மாரடைப்பின் தீவிரம் குறைந்து நெஞ்சில் வலி குறையும். இந்த முதலுதவியைத் தொடர்ந்து எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறோமோ அந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்து வருவதைத் தடுக்க முடியும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







