பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தான் சிறந்த மருந்து, காரணம் இயற்கையிலேயே அதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தொடர்ந்து தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு நோய்கள் வராது . தாய் குழந்தைக்கு தாய்ப்பால் தருவது அவருக்கும் நல்லது, குழந்தைக்கும் நல்லது. ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும்போதே தாய்க்கும், குழந்தைக்குமான உறவு தொடங்கிவிடுகிறது. எனவே, பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்ட தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்காவிட்டால் உடல் ரீதியாகத் தாய்க்கு சில பிரச்சனைகள் ஏற்படும்.

சில பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது பால் கட்டுதல், வலி ஏற்படுதல், பால் சுரப்பதில் சிக்கல்கள் உருவாகின்றன. இது ஏன். இதைத் தடுக்க என்ன செய்யலாம் . குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாய், அது பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும், வந்தால் அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் குழந்தையை எப்படி எல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.
பால் கொடுக்கும் போது, எந்தக் காரணத்துக்காகவும் பால் சுரப்பை இடையில் நிறுத்திவிடக் கூடாது. அப்படித் திடீரென நிறுத்தும்போது `தாய்ப்பால் கட்டு’ பிரச்சனையை ஏற்படுத்தும். மார்பகத்தின் உள்ளே கெட்டியாகக் கட்டியிருக்கும் இந்தப் பால், மார்புக்காம்பின் சுற்றுப் பகுதிகளைப் பாதிக்கத் தொடங்கும்.
பால் கொடுக்கும்போது குழந்தை குடிக்கவில்லை என்றாலும், பாலை வெளியேற்றுவதை நிறுத்திவிட வேண்டாம். பால் கொடுக்கும் போது வலி ஏற்படுகிறது என்பவர்கள், `நிப்பிள் ஷீல்டு’ (Nipple Shield) மூலம் பால் கொடுக்கலாம்.

பால் கொடுக்கும் போது, குழந்தை சரியான நிலையில் தான் இருக்கிறதா என அடிக்கடி பாருங்கள். பால் குழந்தையின் மூக்கில் ஏறி மூச்சு திணறல் ஏற்படலாம். பிறகு, குழந்தை பால் குடிப்பதையே நிறுத்தக்கூடும். குழந்தையின் வாய்ப் பகுதி பால் சுரக்கும் பகுதியில் நன்கு பதிந்திருக்க வேண்டும். கீழ்தாடை, தாயின் மார்போடு ஒட்டியிருக்க வேண்டும்.

குழந்தையின் வாய்ப்பகுதி, மார்பு காம்பு பகுதியை முழுமையாக கவ்வி இருக்க வேண்டும். நுனிப்பகுதியை மட்டும் கவ்வியிருந்தால் `க்ராக்டு நிப்பிள்’ (Cracked Nipple) என்ற பிரச்னை தாய்க்கு ஏற்படும். அப்போது ஏற்படும் வலி காரணமாக, பால் சுரக்காது. பால் மார்புக்குள்ளேயேக் கட்டிக்கொள்ளும். எனவே, குழந்தையை சரியான நிலையில் அமர வைத்து முறையாக பால் கொடுக்க வேண்டும். குழந்தையை மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டும். இப்படியான செய்கைகள், தாய், குழந்தையை மனதளவில் இன்னும் நெருக்கமாக்கும்.







