
சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று முருகன் ஔவையிடம் கேட்டதாக வரும் புராணப் பதிவுகள் கூட நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை நாம் அறிந்து கொள்ளத்தான் என்று எண்ணுமளவிற்க்கு சித்த மருத்துவம் நாவல் பழத்தின் சிறப்பை கூறுகின்றன.
‘நீரிழிவும் சேருமோ, தாகமும் போம்’ என்ற தேரையரின் வரிகள், நீரிழிவு நோயின் அறிகுறிகளில் ஒன்றான அதீத தாகத்தை குறிக்கிறது. இதற்கு தீர்வாக தான் நாவல் பழம் இருக்கிறது.

நாவல் பழத்தை சுவைத்துவிட்டு, அதன் கொட்டையை காய வைத்து அரைத்த சூரணத்தை ஐந்து கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க, நீரிழிவு நோயால் உண்டாகும் அதிக தாகம் (Polydipsia) குறையும். நீரிழிவு நோயும் கட்டுப்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
ஹோமியோபதி மருத்துவத்தில் பரிந்துரை செய்யப்படும் மருந்துகளில் நாவல் பழ வேதிப்பொருட்கள் தான் முதன்மையானது. ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு நாவல் பழம் , இலை , விதை மற்றும் பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது.

பெண்களுக்கான பிரத்யேக பிரச்சினைகளான மாதவிடாய் கோளாறுகள் , அதீத உதிரப்போக்கு , கர்பப்பை கோளாறுகளுக்கும் நாவல் பழத்தில் இருந்து பெறப்படும் மருந்துகள் பரிந்துரை செய்கிறார்கள். நாவல் பழம் சீசன் ஆரம்பமாகி விட்டது. உணவிற்கு பிறகு இரண்டு அல்லது மூன்று நாவல் பழங்கள் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
நாவல் பழங்கள் நிறைய கிடைக்கும் போதெல்லாம் அதனை ஜூஸ் செய்து பருகலாம். அதன் விதைகளை வீண் செய்யாமல் தொடர்ந்து நான்கு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். வெளி உறை கழண்டு , உள்ளே உள்ள பச்சை நிற விதைப்பருப்பு இருக்கும். அதனை மீண்டும் நன்றாக வெயிலில் காய வைத்து மிக்ஸியில் அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து கொள்ளலாம்.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மூன்று கிராம் அளவுக்கு எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம். இதன்மூலம் சர்க்கரை அளவு மட்டும் அல்ல கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் கூட குறைகிறது என்பது தான் கூடுதல் பலன். இதன் இலைகள் கிடைக்கும் என்றால் தினசரி ஒரு இலையை கஷாயம் போல் செய்து குடிக்கலாம்.

நாவல் பழ விழுதினை கோதுமை மாவில் கலந்து பான் கேக் (pancakes) செய்யலாம். நாவல் பழ மில்க் ஷேக் செய்து பருகலாம்.பக்கவிளைவுகள் அற்ற நமது பாரம்பரிய பழங்கள் , காய்கறிகள் அதன் மூலம் கிடைக்கும் உணவு வகைகளை உண்போம். உணவே மருந்தாகும் போது, மருந்து உணவாவது தடுக்கப்படுகிறது.







