கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் வியர்வை அதிகம் சுரக்கும் இதன் காரணமாக வியர்க்குரு மற்றும் அக்குள், தொடை மடிப்பு போன்ற இடங்களில் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டுமென்றால் சுகாதாரமான முறையில் அக்கறை காட்ட வேண்டும்.

சுத்தமான ஆடைகள் அவசியம்
- உள்ளாடைகளை துவைத்து விட்டு வீட்டிற்குள்ளேயே காயப்போடுவதை தவிர்த்து வெயிலில் காய போட வேண்டும். அதன்பிறகு தான் அணிய வேண்டும். உள்ளாடைகளை நன்கு சோப்பு போகும் வரை நீரில் அலச வேண்டும்.
- மற்றவர்களின் பனியன் உள்ளிட்ட உள்ளாடைகளை ஒருபோதும் அணியக்கூடாது.
- காலை மற்றும் மாலை இரண்டு முறையும் உள்ளாடைகளை மாற்றுவது என்பது நல்லது.
- அரிப்புக்குக் காரணமாக பூஞ்சான் கிருமி, யாரிடம் இருந்து வேண்டுமானாலும் உங்களுக்கு வரலாம்.ஆகவே துண்டு , சோப்பு அனைத்தும் தனித்தனியாக பயன்படுத்தவும்.
சருமத்தில் அரிப்பு வந்த பிறகு செய்ய வேண்டியவை :
உங்கள் வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு மருந்தையோ, உங்கள் நண்பர்கள் கூறியதாக ஏதேனும் ஒரு மருந்தையோ அல்லது மருந்துக் கடையில் கேட்டு அவர்கள் கொடுக்கும் மருந்தையோ போடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் சுயமருத்துவம் காரணமாக பூஞ்சை கிருமிகள் உடலில் இருந்து அழிவதில்லை.

தோல் மருத்துவரிடம் சென்று பிரச்சனையை கூறுங்கள். அவர்கள் தரும் மருந்தை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் மருந்தை எடுத்து கொண்டேன் சரியாகிவிட்டது என்று நிறுத்தக்கூடாது. மருத்துவர்கள் எத்தனை நாளுக்கு கொடுக்கிறார்களோ அத்தனை நாளைக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தொடர் சிகிச்சைக்கு அறிவுறுத்தினால் மருத்துவர் சொல்லும் வரை சிகிச்சையை தொடருங்கள்.
உங்களுக்கு பூஞ்சை கொல்லி பாதிப்பு இருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வரலாம். எனவே அவர்களையும் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. அரிப்பு காரணமாக இந்த பூஞ்சான் கிருமிகளை அழிக்க முறையான சிகிச்சை அவசியம். சில நாட்களில் குணமாக கூடிய அளவில் இப்போது உள்ள அரிப்பு பிரச்சனைகள் இல்லை. எனவே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நாட்கள் வரை தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும். உங்களது சர்க்கரை நோயின் அளவு கூட தோல் அரிப்புகளை ஏற்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க முயற்சி எடுங்கள்.
செய்யக்கூடாதவை :
- அதுவரை கை மருத்துவம், பார்மஸியில் மருந்துகள் வாங்குவது, உள்ளிட்ட பழக்கங்களை செய்யாதீர். அப்படி நீங்கள் செய்தால் பூஞ்சான் கிருமிகளின் தாக்கம் இன்னும் அதிகமாகும். அரிப்பும் குறையாது.
- உங்களுக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்து பட்டியலை ஒருபோதும் அடுத்தவருக்கும் , பிறருக்கு தந்த மருந்துகளை உங்களுக்கும் பயன்படுத்தாதீர்கள்.
- உணவில் பத்தியம் கூறியிருந்தால் அதனை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.குறிப்பாக கத்தரிக்காய் , கருவாடு தவிர்க்க சொன்னால் தவிர்க்கவும்.
கோடை காலத்தில் சரும பராமரிப்பு:

- தினசரி இரண்டு முறை குளிக்க வேண்டும்.
- சோப் , ஷாம்புவை தவிர்க்கவும் அதற்கு பதிலாக மூலிகை குளியல் பொடி , சீயக்காய் , அரப்பு என இயற்கை முறையில் பயன்படுத்த வேண்டும்.
- நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வியர்வை காரணமாக வரும் வேர்க்குரு நீங்க அதற்கென உள்ள பவுடர் அல்லது சந்தனம் பூசி வந்தால் நல்ல மாற்றம் தரும்.
- கோடைக்காலத்தில் மட்டுமே வரும் அக்கி போன்ற சரும நோய்கள் வராமல் இருக்க உடல் குளிர்ச்சியாகவும் , சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
- குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு குளிக்கவும்.
- வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
- நீராகாரம் , நீர் மோர் , பழச்சாறுகள் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- நீர் காய்கறிகள் வெண்பூசணி , வெள்ளரிக்காய் போன்றவற்றை பயன்படுத்தி சமையலில் இடம்பெறும் வகையில் மெனுவை தேர்ந்தெடுக்கவும்.
- சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளை தவிர்த்து வெள்ளரிக்காய் ஜூஸ் , வெண்பூசணி ஜீஸ் , கொத்தமல்லி ஜீஸ் , புதினா ஜீஸ் என்று காய்கறிகள் சாறைக் குடிக்கும் போது சர்க்கரையின் அளவு குறையும் மேலும் உடலுக்கும் நன்மை தரும்.
- காய்கறி ஸ்மூத்திகள் , பழங்கள் ஸ்மூத்திகள் கூட பழச்சாறுகளுக்கு நல்ல மாற்று.
- ஸ்மூத்தி குடிக்கும் போது நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் தீரும் மேலும் தோல் பராமரிப்புக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
- மீன் , இறைச்சி , முட்டை , கோழி என அசைவ உணவுகளை கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டும்.
- நிறைய மசாலாக்கள் நிறைந்த உணவுகள் உண்பது என்பதை மாற்றி எளிமையான அதே சமயம் சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- காலை 11 மணியில் இருந்து மாலை 3 வரை வெளியில் வெயில் நேரத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- வெளியே சென்று வீட்டுக்குள் வந்தவுடன் தண்ணீர் அருந்தாமல் பேன் காற்றில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்.
- ஏசியில் தூங்குவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் உடலில் உள்ள நீர் வற்றும் மேலும் நமது தண்ணீர் தாகம் குறைவதால் நாம் தண்ணீர் அருந்துவது குறையும்.
- மார்க்கெட்டிங் போன்ற பணிகளில் வேலை செய்பவர்கள் கோகோ கோலா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது அதற்கு பதிலாக இளநீர் , மோர் , பதநீர் , பழச்சாறு என குடிக்கலாம்.
- வெயிலின் தாக்கம் இருக்கும் போது வெளியே செல்ல வேண்டும் என்றால் ஒரு பாட்டிலில் தண்ணீரும் இன்னொரு பாட்டிலில் எலுமிச்சை மற்றும் உப்பு சர்க்கரை சேர்த்து கலந்து எடுத்து செல்லலாம்.
- காலியான ஸ்பிரே பாட்டிலில் ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து உங்கள் பைகளில் வைத்துக் கொண்டு வெயில் நேரத்தில் வெளியே செல்லும் போது கழுத்தில் , முகத்தில் ஸ்பிரே செய்யவும். குளுமையை உணர்வீர்கள்.







