கையில் ரொக்கமாக பணம் இல்லாத காரணத்தால் கொரோனா தொற்றுக்கு ஆளான பெண்ணை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு மறுத்த நிலையில் அந்த பெண் சாலையிலேயே உயிர் இழந்த கொடுமை ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த அஞ்சலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் குடும்பத்தினர் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று அந்த மருத்துவமனையில் இருப்பவர்கள் கூறியுள்ளனர்.

கையில் ரொக்கமாக பணம் இல்லாததால் ஆன்லைன் மூலம் செலுத்துவதாக அஞ்சலியின் உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வேறு வழியில்லாமல் அஞ்சலியை மருத்துவமனைக்கு வெளியே அமர வைத்து விட்டு குடும்பத்தார்கள் பணம் திரட்ட சென்றுள்ளனர். 3 மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து பணம் திரட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சிகிச்சைக்காக வந்த அஞ்சலி உயிர் இழந்திருந்ததைக் கண்டு கதறினர். அஞ்சலியின் உடலை அங்கிருந்து எடுத்து செல்லக் கூட மருத்துவமனையில் இருந்து யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. பின் செய்தியாளர்கள் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து அஞ்சலியின் உடலை எடுத்து செல்ல உதவி செய்துள்ளனர். கையில் ரொக்கமாக பணம் இல்லாததால் பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க மறுத்த அந்த தனியார் மருத்துவமனையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







