மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் நெற்று ஒவ்வொரு கோவிலாக அவர் சுவாமி தரிசனம் செய்தார். புர்பா மெதினிபூர் எனும் பகுதியில் நேற்று மாலை கோவில் ஒன்றில் தரிசனம் முடித்து திரும்பும் போது மர்ம நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாகவும் அதன் காரணமாக தனக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் அதிர்ச்சி தோய்ந்த முகத்துடன் முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த சமயத்தில் தன்னருகே காவலர்கள் யாரும் இல்லை என்றும், இது ஒரு சதிச்செயல் எனவும் காரில் இருந்தவாரே அவர் தெரிவித்தார். அதன்பின்னர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு இடது காலிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த கட்சி நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்தனர். மாநில ஆளுநர் ஜெகதீப் தங்காரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். இதனால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உள்ளூர் நிர்வாகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. மம்தா மீதான தாக்குதல் குறித்து அறிந்த அவரின் ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
