மத்திய பிரதேசத்தில், கான்பூர் ரவுடி ‘விகாஸ் துபே’ என்கவுண்டரில் சுட்டுக் கொலை

கடந்த வாரம், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகள் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், இந்த திடுக்கிடும் சம்பவம் காவல்துறையை அதிர்ச்சி அடைய செய்தது. 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவன் விகாஸ் துபே. ஜூலை மாதம் 3ஆம் தேதியன்று விகாஸ் துபேயை கைது செய்வதற்காக,  கான்பூர் அருகில் உள்ள பிக்ரு கிராமத்திற்கு போலீசார் சென்றிருந்தபோது விகாஸின் கூட்டாளிகளான ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போலீஸ் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் இறந்தனர். 

Kanpur Rowdy Encounter

தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக 20 போலீஸ் குழுக்கள் அமைத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனால், விகாஸ் துபே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக இருந்தான். 

இதற்கிடையில், விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டநிலையில், நேற்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் விகாஸ் துபே சிக்கினான். உஜ்ஜைன் மகாகாளி கோவிலுக்கு மாஸ்க் அணிந்து சென்றபோது அவனை பார்த்த கடைக்காரர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கோவிலில் இருந்து வெளியேறிய விகாஸ் துபேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

விசாரணைக்குப் பின்னர் உத்தர பிரதேச போலீசில் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான். அவனை உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார், இன்று பலத்த பாதுகாப்புடன் கான்பூருக்கு கொண்டு வந்தனர்.

கான்பூரை நெருங்கியபோது அவர்கள் வந்த வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அனைவரும் அந்த வாகனத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். அவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த விகாஸ் துபே சிறிது நேரத்தில் உயிரிழந்தான். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

scroll to top