டிக் டாக் உள்ளிட்ட 59 சீன நிறுவன செயலிகள் சமீபத்தில் தடைசெய்யப்பட்டு அவைகள் பயன்பாட்டிற்கு இல்லாமல் போயுள்ளன. டிக்டாக் இடத்தை நிரப்ப ரீல்ஸ் என்ற வசதியை இன்ஸ்டாகிராம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்திய – சீன லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி டிக் டாக், யூசி பிரவுசர், ஷேர் இட் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு சமீபத்தில் தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்புகள் வந்தாலும், டிக் டாக் மூலம் பிரபலமடைந்த, வருமானம் ஈட்டிய பலரும் புலம்பி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுக்குள் இருக்கும் பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொண்டு வந்தது இம்மாதிரியான செயலிகள்தான். குறிப்பாக டிக் டாக்கில் பொழுதை கழித்தவர்களும், டிக் டாக் மூலம் பிரபலமானவர்களும் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துபோயுள்ளனர். அதே நேரத்தில் டிக் டாக்கிற்கு ஏங்கி நிற்கும் இந்திய சந்தையில் எப்படியாவது புகுந்துவிட வேண்டுமென பல செயலிகள் முயற்சி செய்கின்றன. இந்த நேரத்தில் சமூக வலைத்தள ஜாம்பவான் ஃபேஸ்புக் தன்னுடைய நிறுவனமான இன்ஸ்டா மூலம் புது வசதியை டிக் டாக் இடத்தில் நிரப்ப களம் இறங்கியுள்ளது.
இன்ஸ்டாவில் ரீல்ஸ் என்ற வசதி மூலம் 15 விநாடி சிறிய வீடியோக்களை பதிவு செய்து ஷேர் செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இதனை நேரடியாக அவரவர்களின் இன்ஸ்டாவில் ஷேர் செய்யலாம். இன்ஸ்டாவின் இந்த புதிய வசதி டிக் டாக் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிக் டாக் போன்று வேறு ஏதேனும் நிறுவனம் கொண்டுவரும் செயலியை விட, இது சற்று வேகம் எடுக்கும் என்றே கூறலாம். காரணம், இன்ஸ்டா ஏற்கனவே பலகோடி மக்களை தன்வசம் கொண்டுள்ளது.