தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது

கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் (COVAXIN) என்ற தடுப்பூசி மருந்தை, இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் எஸ்ஆர்எம் கல்லூரியில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது.

COVAXIN in TamilNadu

கோவாக்ஸின் தடுப்பூசியை  மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தின் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா என  நாடு முழுவதும் சுமார் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

டெல்லி மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ‘கோவாக்சின்’ பரிசோதனை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை இன்று தொடங்கியது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் மருந்து பரிசோதனை தொடங்கியது.

ஆரோக்கியமான நிலையில் உள்ள தன்னார்வலர்கள் 10 பேரில் இரண்டு பேருக்கு 0.5 என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

இந்த கோவாக்ஸின் தடுப்பூசி மருந்து இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாதை சேர்ந்த பாரத் பையோடெக் என்ற நிறுவனம், புனேவை சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (NIV) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இவை இணைந்து தயாரிக்கபட்ட தடுப்பூசி மருந்துதான் இந்த கோவாக்ஸின்.

scroll to top