ஆஸ்திரேலியாவை இந்தியா ஜெயித்துவிட்டால், அந்த வெற்றியை ஓர் ஆண்டுக்கு இந்திய அணி கொண்டாடலாம் -ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி முடிந்தவுடன் தனது மனைவியின் பிரசவத்திற்காக இந்தியா திரும்ப இருக்கிறார் விராட் கோலி. இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி அடையும் என முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல், முதல் போட்டி முடிந்தவுடன் இந்திய கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்புகிறார். அவர் இல்லாதது பேட்டிங் வரிசையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சூழ்நிலையில் இளம் வீரர்கள் தங்களை நிரூபித்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் மாறும் என்று கூறி இருந்தார்.

இப்போது இதே வரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் கருத்து பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், விராட் கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே எனது கருத்து. கேப்டன் பொறுப்பானாலும், பேட்டிங் ஆனாலும், கோலி இல்லாவிட்டால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும்.

விராட் கோலி இடத்தை எந்த பேட்ஸ்மேன் நிரப்ப போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை விராட் கோலி இல்லாமல், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை இந்தியா ஜெயித்துவிட்டால், அந்த வெற்றியை ஓர் ஆண்டுக்கு இந்திய அணியினர் கொண்டாடலாம். அப்படி பெறும் வெற்றி, உண்மையில் நம்பமுடியாத வெற்றி.

கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர், நல்ல பேட்ஸ்மேன். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவருக்கு இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அவரால் நிச்சயம் டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் விளையாட முடியும். ஆனால், கோலி இடத்தை அவரால் மட்டுமல்ல, யாராலும் நிரப்ப முடியாது. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றவர், ரஹானே பற்றியும் பேசினார்.

ரஹானே சிறந்த வீரர், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். கேப்டன்ஷிப் என்று வரும்போது ரஹானே சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். இந்திய அணிக்கு இருக்கக்கூடிய ஒரு சாதகமான விஷயம் என்றால், அது ரஹானேவின் கேப்டன்ஷிப்தான். அதைக் காண எல்லோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ரஹானே தன்னை நிரூபித்தால் வரலாறு படைக்க முடியும். என்னை பொறுத்தவரை இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் டெஸ்ட் தொடரை அணுக வேண்டும். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் திறமை தங்களுக்கு இருக்கிறது என்று அவர்கள் நம்ப வேண்டும்.

scroll to top