
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் நடந்த வாகன சோதனையின் போது தனியார் நகை கடையில் இருந்து உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 54 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி பறக்கும் படை அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் சுரங்கப்பாதை அருகே காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, வாகனத்தில் ரூபாய் 54 லட்சம் இருப்பது தெரியவந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரனையில் பழவந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் இருந்து பணத்தை கொண்டு வந்ததாக கூறப்பட்டது.







