தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். இவர் சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரைக்கு வந்து சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு பெரிய முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்தார். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் காமெடியனாக நடித்து ஓரளவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் ஒரு காமெடியனாக மட்டுமில்லாமல் ஒரு சமூக சேவகராகவும் பணியாற்றி வருகிறார்.
கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளின் முகாமிற்கு சென்று அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வந்தார். இவர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவரை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்தைப் பெறுவது ரோபோ சங்கரின் வழக்கம்.
இந்நிலையில் கமல்ஹாசனின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித்தொண்டர்கள் இலவச கண் சிகிச்சை முகாமை அகர்வால் கண் மருத்துவமனையில் நடத்தினர். இதில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் கமல்ஹாசனைப் பின்பற்றி தானும் முழு உடல் தானம் செய்தார். வரும் நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து முழு உடல் தானத்திற்கான சான்றிதழை காண்பிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.