இக்கால குழந்தைகளுக்கு தேவையான உணவு பழக்கம்!

இக்காலகட்டத்தில் குழந்தைகளின் உணவு விஷயங்களில் அதிக அக்கறையை பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள  வேண்டும். தற்போது நிறைய மாணவர்கள் அதிக உடல் எடையுடனும் ரத்த அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள். பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் எய்தி விடுகிறார்கள். மேலும் சிலருக்கு ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சிக்கல், திருமணத்துக்குப் பிறகும் அவர்களை விடாமல் துரத்துகிறது.

 

பெரும்பாலும் பெற்றோர்கள் செய்யும் தவறு என்னவென்றால் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாக தவிர்த்துவிடுவது, இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அதில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

காய்கறி, கீரையை சாப்பிட பழகுங்கள்

உணவு விஷயத்தை பொறுத்தவரை பெற்றோர்கள்  சொல்வதை குழந்தைகள் கேட்பதாக இருக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப் பழக்கத்தை பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும்.

மேலும், பெற்றோர்கள் வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிட கொடுக்க வேண்டும். இறைச்சி உணவுகளை  அதிகம் குழந்தைகளுக்கு பழக்குவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். குழந்தைப்பருவம் முதலே காய்கறி, கீரையை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ஓடியாடி விளையாட கற்றுக்கொடுங்கள்

முன்பு இருந்ததை விட, குழந்தைகள் உடலுக்கு அதிக வேலை  தருவதேயில்லை. இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதை தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாட பழக்க வேண்டும். யோகா, விளையாட்டு போன்றவற்றை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

மேலும், இதனால் உடல் தசைகள் வலுப் பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாத கொழுப்பு சேர்வதும் குறையும். முறையற்ற உணவு பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படும். நம் உணவு பழக்கம் சீராக இருந்தாலே எந்த சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே உணவு பழக்கங்கள் குறித்த அவசியத்தை கூறுவது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top