உணவிற்கு பின்னர் வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்களே பாக்டீரியாக்கள் பெருகும் இடங்கள். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், மிகவும் குளிர்ந்த உணவுகளாலும் பற்கள் பாதிக்கப்படுகிறது. பற்களில் பாதிப்பு என்பது இதயத்தையும் பாதிக்கிறது.

ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். பற்களின் பராமரிப்பின் அவசியத்தை குழந்தைகளுக்கு எடுத்து கூறி சிறுவயதிலேயே பற்களை துலக்குதல் முதற்கொண்டு கற்றுக் கொடுக்க வேண்டும்.
பல் துலக்குதல்

காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். பற்களை நீண்ட நேரம் துலக்கும் போது அது பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலை தேய்த்துவிடும். மேற்புற ஈறுகளை மேலே இருந்து கீழாகவும், கீழ்ப்புற ஈறுகளை கீழே இருந்து மேலாகவும் விரலால் அழுத்தித் தேய்த்தால், ஈறுகள் பற்களுடன் வலுவாக இணைந்திருக்கும்.
உணவுத் துகள்கள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் தங்கி , அதன் மூலம் பாக்டீரியா தொற்றுகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.வாய் துர்நாற்றமும் ஏற்படாது. ஈறுகளில் வீக்கமும் ரத்தக் கசிவும் ஏற்படாமல் பற்கள் பாதுகாக்கப்படும்.மூலிகை பற்பொடிகள் கொண்டு தினமும் இரவு அல்லது வாரம் ஒரு முறையாவது விரல்களால் பல் துலக்க வேண்டும்.
வாய் கொப்பளித்தல்
இரவு படுக்கும்போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டு படுப்பது கூட பற்கள் பராமரிப்பில் முக்கியமானது. மஞ்சள் தூள் கலந்த வெதுவெதுப்பான நீரில் கூட வாய் கொப்பளிக்கலாம். சந்தையில் கிடைக்கும் தரமான மவுத் வாஷ்னர் கொண்டு வாய் கொப்பளித்து வரலாம்.மவுத் வாஷ்னரில் உள்ள –
Listerine or chlorine dioxide எனும் வேதிப்பொருள் வாயில் உள்ள கிருமிகளை அழித்து பற்களை வலிமையாக்குகிறது. நமக்கு நன்கு தெரிந்த “ஆயில் புல்லிங்”, கூட சிறந்த முறை தான் .
பற்களைப் பாதுகாக்கும் உணவுகள்
நிறைய நார்ச்சத்து , கால்சியம் மற்றும் விட்டமின் டி நிறைந்த உணவுகள் பற்களை பாதுகாக்கும். தாமிரம், துத்தநாகம் , பாஸ்பரஸ் போன்ற நுண் தனிமங்கள் கூட பற்களின் வலிமைக்கு தேவை.நிறைய தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் நிறைய குடிக்கும் போது வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும்.இதனால் பற்கள் பாதுகாக்க படுகிறது.
நாக்கு பராமரிப்பு

பற்கள் பராமரிப்பு என்றாலே அதில் நாக்கும் உள்ளடக்கம். தரமான tongue cleaner ஐ கொண்டு நாக்கின் மேற்புறத்தில் சுத்தம் செய்ய வேண்டும்.நாக்கில் பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் இவை கூட வாய் துர்நாற்றம் ஏற்படக் காரணம் ஆகிறது.
பல் கட்டுதல்
பற்களை எடுத்திருந்தால், ஆறு மாதங்களுக்குள் செயற்கைப் பற்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இல்லை எனில் மேற்பற்கள் கீழே இறங்கவோ அல்லது கீழ் பற்கள் மேலே ஏறவோ . பற்கள் தேய்மானம் இவற்றைத் தவிர்க்க , எஞ்சிய பற்களைப் பாதுகாக்க பொய்ப் பற்கள் கட்டிக் கொள்வதுதான் உத்தமம்.
பற்களின் நலம் காக்க தவிர்க்க வேண்டியவை
- கார்போஹைட்ரேட்கள், சர்க்கரைப் பொருட்கள் போன்றவை பற்சிதைவை தூண்டுபவை ஆகவே இவற்றை உட்கொள்வதை குறைத்து அல்லது கவனமாக இருந்தால், பற்சிதைவுக்கான வாய்ப்புகள் குறையும்.
- பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் , செயின் டாலரை கடித்தல் போன்ற செயல்களால் பற்கள் பாதிப்படையும், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்திவிடும்.
- கார்பன் டை ஆக்ஸைடு கலந்த கொக்கோ கோலா வகை குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலைப் பாதிப்பதோடு பற்களையும் அரிக்கின்றன. பானங்களைக் குடித்தே ஆக வேண்டிய சமயங்களில் இயன்றவரை ஸ்ட்ரா மூலம் அருந்தலாம்.
- பால் புட்டியில் பால் அருந்தியவுடன் குழந்தைகள் அப்படியே தூங்கிவிடும். இந்த பழக்கத்தால் பால் பற்கள் பாதிக்கப்படும். எனவே, குழந்தை பால் குடித்த பிறகு சிறிது தண்ணீரைக் குடிக்கச் செய்வது அவசியம்.
- வெற்றிலை , பாக்கு போடுதல் , புகையிலை மற்றும் மதுபான பழக்கம் ஈறுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதால், அவற்றைத் தவிர்ப்பது பல் பாதுகாப்புக்கு உதவும்.
- பற்களின் பாதுகாப்புக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதாக வரும் என்பதால் ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
