கள்ளக்குறிச்சியில் இளம் பெண்ணை அவருடைய காதலனே கொன்ற சம்பவம் – காரணம் என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை அவரது காதலனே கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, செவிலியர் படிப்பு படித்துக்கொண்டிருந்த சரஸ்வதி, ஏப்ரல் 2ஆம்  தேதி அதிகாலையில் வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில்  சடலமாகக் கிடந்தார். திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வந்தனர். உடற்கூராய்வில் சரஸ்வதியின் கழுத்து நெறிக்கப்பட்டது தெரியவந்தது.


இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது, சரஸ்வதியின் காதலன் 21 வயதான ரங்கசாமி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. செல்போன் சிக்னல் அடிப்படையில் ஆந்திர மாநில எல்லையில் பதுங்கியிருந்த ரங்கசாமி மற்றும் அவரது நண்பர்  ரவீந்திரன், 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. சரஸ்வதி, பண்ருட்டியில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் செவிலியர் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.  சென்னை மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி உடன் சரஸ்வதிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. காதலிக்கு ரங்கசாமி செல்போனும் வாங்கிக் கொடுத்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சரஸ்வதி வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.


தாய்மாமன் மகனுக்கு சரஸ்வதியை திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதற்காக மார்ச் மாதம் மகளுடன் ஊர் திரும்பிய தாய், தாய் மாமன் மகனுடன் நிச்சயதார்த்தமும் செய்து வைத்தார். தகவல் அறிந்த ரங்கசாமி சரஸ்வதியை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு, தான் வாங்கிக் கொடுத்த செல்போனையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் போலீசார் கூறுகின்றனர். புகைப்படங்களை அழித்து விடும்படி சரஸ்வதி கெஞ்சியுள்ளார்.

இது தொடர்பாக ஏப்ரல் 2ஆம்  தேதி நள்ளிரவில் சரஸ்வதியை சந்திக்கச் சென்றுள்ளார் ரங்கசாமி. நண்பர்கள் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவனை வீட்டின் பின்புறம் தொலைவில் நிற்கச் சொல்லிவிட்டு சென்றுள்ளார். இருவரும் வீட்டின் பின்புறம் உள்ள முட்புதர் அருகே சந்தித்து பேசியபோது சரஸ்வதி தன் பெற்றோர் முடிவிற்கு கட்டுப்படப் போவதாக தெரிவித்துள்ளார். வாக்குவாதத்தின் உச்சத்தில் ஆத்திரமடைந்த ரங்கசாமி சரஸ்வதியின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை தூக்கிச் சென்று வீட்டின் கழிப்பறை அருகே போட்டு விட்டு அவரது நண்பர்களுடன் தப்பிச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.  

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top