ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்தியது. இந்நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

Jayalalitha Poes Garden House

இந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.  24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது.

தற்போது, இழப்பீட்டு தொகையை செலுத்திவிட்டதால், போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது. இழப்பீட்டு தொகையை, சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. 

அதேவேளையில், போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

எப்படியிருந்தாலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வேதா இல்லம் தொடர்பான அடுத்தகட்ட நீதிமன்ற நகர்வுகள் எதிர்தரப்பிடம் இருந்து இருக்குமா என்பது அடுத்து தெரியவரும்.

scroll to top