ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் மும்பை அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது…!!

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கடந்த நவம்பர் 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட்  கவுகாத்தி, கோவா அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின.

ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், பெங்களூரு, சென்னை, ஈஸ்ட் பெங்கால், கேரளா பிளாஸ்டர்ஸ், ஒடிசா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

 

 

மும்பை அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் சமநிலை வகித்ததால் (2-2) ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, இந்த முறை புகழ் பெற்ற மோகன் பகான் கிளப்புடன் இணைந்து ஏ.டி.கே. மோகன் பகான் என்ற பெயரில் களம் கண்டது. அந்த அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

படோர்டாவில் நடந்த பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய கோல்கட்டா மோகன் பகான் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை அணியை எதிர்கொண்டது.

 

 

ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பை வென்றது. இதுவரை கோல்கட்டா 3, சென்னை 2, பெங்களூரு, மும்பை அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

ஐ.எஸ்.எல்., தொடரில் இம்முறை மொத்தம் 298 கோல் பதிவாகின. மும்பை சார்பில் அதிகபட்சமாக 39 கோல் அடிக்கப்பட்டது. இகோர் அங்குலோ (கோவா), ராய் கிருஷ்ணா (கோல்கட்டா) அதிகபட்சமாக தலா 14 கோல் அடித்தனர்.

  ஐ.எஸ்.எல்., விருதுகள்

  •  இத்தொடரின் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருதை கோல்கட்டா அணியின் ராய் கிருஷ்ணா வென்றார்.
  •  அதிக கோல் அடித்தவருக்கான ‘கோல்டன் பூட்’ விருதை கோவா அணியின் இகோர் அங்குலா தட்டிச் சென்றார்.
  • சிறந்த கோல்கீப்பருக்கான ‘கோல்டன் கிளவுஸ்’ விருதை கோல்கட்டா கோல்கீப்பர் அரிந்தம் பட்டாசார்ஜா வென்றார்.
scroll to top