அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டி தோல்வியை தழுவியது இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அதிரடி வெற்றி ஷ்ரேயாஸ் ஐயரின் போராட்டம் வீணானது.
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 124 ரன்களில் சுருண்டது. இந்தியாவின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறிய நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் கைகொடுத்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஹர்த்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியஷ்ரேயாஸ் அய்யர் 36 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் பென் ஸ்டோக்ஸ், மார்க்வுட், அடில் ரஷித், ஜோர்டான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதனையடுத்து 125 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, துவக்க வீரர்கள் ஜேசன் ராய் (49), ஜோஸ் பட்லர் (28) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், வெற்றிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ ஜோடி வெற்றியை உறுதி செய்தது.

16வது ஓவரில் மாலன் சிக்சர் அடிக்க, இங்கிலாந்து அணி 130 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் மாலன் 24 ரன்களுடனும், பேர்ஸ்டோ 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் சகால், வாஷிங்டன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
