பறக்கும் படை அதிரடி சோதனை- மதுரையில் ஒரே நாளில் ரூ.2 கோடி

மதுரை மத்திய தொகுதி தேர்தல் அதிகாரி கோட்டூர் சாமி தலைமையில் போலீசார் மகபூப்பாளையத்தில் நேற்று வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு வேன் வந்தது. இதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அப்போது வேனில் ரூ.1.75 கோடி இருப்பது தெரிய வந்தது.

அதிகாரிகள் வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அது ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் வேன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரிடம் ஆவணங்களை வாங்கி பார்த்தனர். அப்போது அவர்கள் மேற்கண்ட பணத்துக்கான ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என்று தெரிகிறது.எனவே தேர்தல் அதிகாரிகள் வேனில் இருந்த ரூ.1.75 கோடியை பறிமுதல் செய்து மதுரை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மதுரை கிழக்கு தொகுதி நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேற்று விளாத்தூர் பகுதியில் சோதனை நடத்தினார்கள்.அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு காரை மறித்து போலீசார் சோதனை நடத்தினார்கள்.அப்போது காரில் இருந்து இம்தியாஸ் என்பவரிடம் ரூ.5.40 லட்சம் பணம் பிடிபட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. எனவே போலீசார் இம்தியாசிடம் ரூ.5.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

மதுரை தெற்கு தொகுதி கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேற்று திருமலை நாயக்கர் மஹால் பகுதியில் சோதனை பணிகளில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அரிசி ஆலை ஊழியர் கரண் ராஜிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோழவந்தான் அடுத்த கட்டக்குளம் பகுதியில் மதுரை தெற்கு பறக்கும் படை அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சொக்கலிங்க நகர் சுரேஷ் பாபுவிடம் ரூ.1.04 லட்சம் பிடிபட்டது.

அதேபோல் பரவை ஜெபக்குமார் என்பவரிடம் இருந்து அதிகாரிகள் ரூ.79 ஆயிரத்து 840-யை பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் செம்புகுடிப்பட்டியில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இதில் பூச்சம்பட்டியை சேர்ந்த மாயாண்டி என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பு உடைய அரசியல் கட்சி துண்டுகள், கட்சிக்கவர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சோழவந்தான் அடுத்த நாயக்கன்பட்டியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருமலைக்குமார் என்பவரிடம் ரூ.57 ஆயிரத்து 700 பிடிபட்டது.

 மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 கோடி ரூபாய் பணம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course