புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு,144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கையாக புதுச்சேரி வான்வெளியில் விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரும் ஏப்.,6ம் தேதி புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் தேஜக கூட்டணியான என்ஆர் காங்கிரஸ் 16, அதிமுக 5 மற்றும் பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனிடையே பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை (30ம்தேதி) புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மாலை 4 மணிக்கு ஏஎப்டி மில் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தாமரை, இரட்டை இலை, ஜக்கு சின்னங்களுக்கு ஆதரவு திரட்டுகிறார் பிரதமர் நரேந்திரமோடி.இதனால், ஏஎப்டி பஞ்சாலைத் திடல் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணா்கள் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். 24 மணி நேரமும் காவல் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே நகரில் பிரதமர் செல்லும் பாதைகளிலும், விழா நடக்கும் பகுதியிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேசமயம் மக்கள் கூடுவதற்கு தடையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.