12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாதுகாப்புடன் நடத்த முடிவு – அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி

 

             

கொரோனா நோய் தொற்று கடந்த ஆண்டு அதிக அளவில் பரவியதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் +2  மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி மாத இறுதியில் இந்த 3 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. அதன் பின் அவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், +2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.

 

              

பண்டிகை மற்றும் தேர்தலால் கடந்த 2ஆம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு விடுமுறைக்கு பின் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 தேதி தொடங்கப்படவுள்ளது. அதற்கு முன்பு செய்முறை தேர்வு வரும் 16 தேதி முதல் 23 தேதி வரை நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

 

                  

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் செய்முறை தேர்வு மற்றும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படலாம் என்று பேச்சு அடிபட்ட நிலையில். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தி திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்று தேர்வை நடத்த தீவிரம் காட்டி வருகிறது. அதை தொடர்ந்து செய்முறை தேர்வு பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு 23 நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அந்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். 

 • செய்முறை தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பிறகும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
 • ஒவ்வொரு முறையும் செய்முறை தேர்வு முடிந்ததும் அனைத்து சாதனங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
 • தேர்வுக்கு வரும் மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரச் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்வுக்கு எத்தனை மாணவர்களை பங்கேற்க செய்வது என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.
 • மாணவர்களுக்கு 4 சதுர மீட்டர் தூரத்துக்குள் தேவையான சாதனங்கள் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
 • தேவையான அளவிற்கு ஹேன்ட் சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
 • ஹேன்ட் சானிடைசர் தீப்பற்றும் தன்மை கொண்டதாகும். எனவே எரியக்கூடிய சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும்.
 • ஹேன்ட் சானிடைசர் பயன்படுத்திய மாணவர்கள் எரிந்து கொண்டிருக்கும் எந்த சாதனத்தையும் உடனடியாக தொட வேண்டாம்.
 • செய்முறை கூடத்தில் உள்ள மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா விதிமுறைகளை முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளிகளை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 • செய்முறை தேர்வு நடக்கும் போது கதவு, ஜன்னல்களை கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும்.
 • உள்காற்றை வெளியே தள்ளும் ‘எக்சாஸ்ட்’ மின்விசிறியை ஓட விட்டிருக்க வேண்டும். உரிய காற்று வசதிகள் இருக்க வேண்டும்.
 • அனைத்து மாணவர்கள் ஊழியர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
 • தேர்வு நடக்கும் போது மாணவர்கள், ஊழியர்கள் முக கவசம் அணிவது கட்டாய விதிகள் ஆகும்.
 • மாணவர்கள் சொந்த சானிடைசர், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்கலாம்.
 • ஒவ்வொரு மாணவரும் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பிறகும் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
 • ஆய்வுக் கூடத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், வினாத்தாளையும் தொடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 • ஏற்கனவே தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பேட்ஜ் மாணவர்களும் காத்திருப்பதற்கு உரிய ஓய்வு அறைகளை ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.
 • அந்த ஓய்வு அறைகளையும் ஒவ்வொரு பேட்ஜ் மாணவர்கள் வருவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
 • பாதுகாப்பான குடிநீர் தேர்வு மையத்திலும், ஓய்வு அறையிலும் வைத்து இருக்க வேண்டும்.
 • கழிவறைகளை சிறந்த முறையில் சுத்தம் செய்து இருக்க வேண்டும். போதிய தண்ணீர் வசதிகள் செய்திருக்க வேண்டும்.
 • மாணவர்கள் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு மறுபடியும் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, ஜலதோ‌ஷம் இருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கும் வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதியை முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பார்.
 • நோய் பாதிப்பு மண்டலத்தில் பள்ளிகள் அமைந்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு வேறு ஒரு பள்ளியில் தேர்வு நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரி செய்து தருவார்.
 • வேதியியல் செய்முறைத் தேர்வில் பிப்பெட் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது. வாய்வழியாக ரசாயனங்களை உரிய இந்தக் கருவி பயன்படும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டாம்.
 • அதேபோல் தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத் தேர்வில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்த கூடாது. மாணவர்கள் மைக்ரோஸ்கோப் லென்ஸ் அருகே கண்களை பதித்து செய்முறை தேர்வில் ஈடுபடுவார்கள் என்பதால் இதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதன் மூலம் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

            

 

செய்முறை தேர்வுக்கு வழங்கப்படும் “டாப்ஷீட்” இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்றும் செய்முறை தேர்வு திட்டமிட்டபடி பாதுகாப்புடன் நடத்தப்படும் அதை தொடர்ந்து பொதுத்தேர்வும் திட்டமிட்டபடி நடத்தவுள்ளதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course