இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு – சீமான் கடும் கண்டனம்

இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க உத்தரவிட்டது தொடர்பாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது கொடுங்கோல் போக்காகும் எனவும், இது இந்தியாவின் இறையாண்மையையே அவமதிக்கும் கொடுஞ்செயல் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்து இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெரிய கடற்பரப்பைக் கொண்ட தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களில் வாழும்தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்திலும் அவர்கள் மீதுள்ள தீராத வன்மத்தின் காரணமாகவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது.

NTK Chief Seeman Condemns

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை வங்கக்கடலில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக அத்துமீறி பறிமுதல் செய்யப்பட்ட 94 படகுகள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும், 37 படகுகள் மன்னார் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தன. அப்படகுகளை மீட்டுத் தரக்கோரி தமிழக மீனவர்கள் போராடி வரும் நிலையில், இலங்கை அரசின் இச்செயல் அவர்களை கலங்கடித்துள்ளது.

தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது தமிழ்த்தேசிய இனத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசு கொண்டிருக்கிற கொடும் வன்மத்தின் வெளிப்பாடாகும். இப்போது அழிக்க ஆணையிடப்பட்டுள்ள படகுகள் எந்த வழக்கிலும் சம்பந்தப்பட்டவை அல்ல. அவை, ஏற்கனவே தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பதற்காக வைத்திருந்தவை . அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது வீண் சிக்கலை உருவாக்கும். இது தேவையற்ற நடவடிக்கையாகும் . மத்தியில் ஆட்சி புரியும் அரசு இவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

பல நெருக்கடிகளுக்கிடையில் வங்கியில் கடன்பெற்று உருவாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அழிக்க சிங்கள அரசின் நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது கொடுங்கோல் போக்காகும். இது இந்தியாவின் இறையாண்மையையே அவமதிக்கும் கொடுஞ்செயலாகும்.

இவ்விவகாரத்தில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, தமிழக மீனவர்களின் 121 படகுகளையும் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் . தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

scroll to top