மாப்பிள்ளை அவர்தான் ஆனா, அவர் போட்டுட்டு இருக்க சட்டை என்னுடையது இல்ல..

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை நேற்று சமூகவலைதளங்களில் வெளியானது. தற்போது இதுதான் அரசியல் களத்தில் வைரல் நியூஸ். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, வர மாட்டாரா என்ற குழப்பம் அவர்களுடைய ரசிகர்களிடையே நீடித்து வரும் நிலையில், இந்த அறிக்கை, ரஜினிகாந்திடம் இருந்து வந்த பதிலாக பார்க்கப்பட்டது. ஆனால், அது நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் வெளியிட்ட அறிக்கை அல்ல என்று தெரிய வந்துள்ளது.

அதே வேளையில், ரஜினி தரப்பில் இருந்து கூறப்பட்டிருப்பது என்னவென்றால் – அந்த அறிக்கை என்னுடையது அல்ல, ஆனால் அதில் உள்ள செய்திகள் உண்மையே என்பது போல சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கொரோனா நோய் தொற்று காரணமாக தன்னுடைய அரசியல் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை என்பதையும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இயலாத செயல் என்பதையும் ரஜினி விளக்கி இருந்தார். ரஜினி தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்படாத இந்த அறிக்கையால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.” என அந்த ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Rajinikanth Coming to Politics

ரஜினியின் படையப்பா படத்தில் செந்திலுடன் ஒரு நகைச்சுவை காட்சி வரும். அதில், ரஜினி கூறுவார் – “மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டுட்டு இருக்க சட்ட என்னது இல்ல” என்று. கொஞ்சம் மாற்றியது போல், “அந்த அறிக்கை என்னுடையது அல்ல, ஆனால் அதிலுள்ள தகவல்கள் உண்மைதான்” என்றுள்ளதாக நெட்டிசன்கள் புலம்புகிறார்கள்.

scroll to top