ஓபிஎஸ் மகன் காரை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது – உடைத்தது யார்?

 


தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதனையடுத்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு நடைபெற்ற போது, போடி தொகுதியில் உள்ள அனைத்து பூத்களையும் பார்வையிட்ட தேனி எம்.பி.யும், ஓபிஎஸ்
மகனுமான ரவீந்திரநாத் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

 

அப்போது, போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாளகவுண்பட்டி கிராமத்திற்கு சென்ற ரவீந்திரநாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, எம்.பி.யுடன் சென்ற அதிமுகவினரும் அவர்களுடன் பதில் வாக்குவாதம் செய்ததால் ஒருவொருக்கு ஒருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் கற்களை எடுத்து வீசி தாக்கிக் கொண்டதில், ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி மற்றும் உடன் சென்ற இரண்டு காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

 

ரவீந்திரநாத்தின் காருக்கு வழிவிடாமல் சில இளைஞர்கள் நின்றிருந்ததாகவும், அவர்கள் வேண்டுமென்றே இதுபோன்று செய்வதாகவும் உணர்ந்த அவர், காரை விட்டு இறங்கி கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில், போலீசார் அந்த இளைஞர்களிடம் பேச முற்பட்ட போது, காரை தாக்கி விட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டதாக ரவீந்திரநாத் தரப்பில் கூறப்படுகிறது.

அத்துடன், தனது கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் திமுகவினர் என்றும், அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளததாகவும் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் திமுக வினர் மீது பொய்யான குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போடி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

 

மேலும், பெருமாளகவுண்பட்டிக்கு ஆய்வுக்கு சென்ற போது, ரவீந்திரநாத்தின் பாதுகாவலர்கள் அந்த ஊரை சேர்ந்த நபர்களை தாக்கியதாகவும், அதனால் அமமுக கட்சியை சேர்ந்த நபர்கள் அவர்களை திரும்ப தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட சண்டையில் வாகனமும் சேதமடைந்துள்ளதாக தங்கதமிழ்செல்வன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, சம்பவம் தொடர்பாக போடி தாலுகா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்த போது, வன்னியர் உள் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட சமூகத்தினரில் சிலர்தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் காரை தாக்கியுள்ளனர். அவர்களில் 15 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற சாதியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும் என்று கருதும் ஓபிஎஸ், ஒருகட்டத்தில் இது தற்காலிகம்தான் என்று அவர் பகிரங்கமாகவே அறிவிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course