கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகள் எதற்கெல்லாம் விதிக்கப்படும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் மீண்டும் நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில், நிலைமைக்கு ஏற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது நாள் ஒன்றுக்கு 3500 க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளார், “பொது முடக்கம் குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஏப்ரல் 7ஆம் தேதிக்குப் பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்” என்று விளக்கமளித்திருந்தார்.
எனவே, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கம் போல அமல்படுத்தப்படாது எனவும், அதே நேரம் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு ஏற்கனவே அளிக்கப்பட்ட தளர்வுகள் திரும்பப் பெறப்படும் எனவும் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை, வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி ஆகியோருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவலின் வேகம், பாதிப்பு விவரங்கள், கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் வதந்தியே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அவர்களிடம் என்னென்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று விசாரித்த போது, சமீபத்தில் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி தமிழகத்திலும் விதிக்கப்படலாம் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News