நிவர் புயலை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது

நிவர் புயல் காரணமாக மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாப்புக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் தென் வங்காள விரிகுடாவின் மையப் பகுதிகள் நவம்பர் 22 அன்று மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 60 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும். நவம்பர் 23 அன்று மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 65 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும். நவம்பர் 24 அன்று மணிக்கு 55-65 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 75 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும். நவம்பர் 25 அன்று மணிக்கு 80-90 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 100 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகும் நிவர் புயல் தமிழக கரையை நோக்கி நகர்ந்து வருவதாகவும்,  இது காரைக்கால் – மாமல்லபுரம் இடையே வரும் 25-ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும். இச்சமயத்தில் பொதுமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

Nivar Cyclone in Tamilnadu

வட தமிழக கடலோர பகுதிகளான கோடியக்கரை (Point Calimere) முதல் பழவேற்காடு (Pulicat) வரை 22.11.2020 அன்று 17.30 மணி முதல் 25.11.2020 வரை 23.30 மணி வரை கடல் அலையின் உயரம் 8 அடி முதல் 18 அடி வரை கடல் சீற்றமாக இருக்கக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது
TN SDMA (@tnsdma) November 22, 2020

புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம். அதனால் குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். புயல் வருவதற்கு முன்பு, வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்.

அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். உறுதியான கயிறுகள், காற்றை சமாளித்து எரியும் அரிக்கேன் விளக்குகள் வைத்திருக்க வேண்டும். மேலும் பாட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், பேரிச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழ வகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் மூக்குக் கடலை, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இதுமட்டுமல்லாது அடையாள ஆவணங்களான ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உரைகளைக் கொண்டு பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும். புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டு, அதன்படி செயல்படலாம் எனத் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

scroll to top