செப்டெம்பர் முதல் மெட்ரோ ரெயில் இயங்க வாய்ப்பு. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்

செப்டம்பர் 1-ந் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் ஒன்றாக, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களை திறக்க தடை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் 25-ந் தேதி கொண்டுவரப்பட்ட ஊரடங்கில், ஜூன் மாதம் 1-ந் தேதியில் இருந்து மாதந்தோறும் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனைத்தொடர்ந்து, 4-ம் கட்ட தளர்வுகள், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த தளர்வுகளை இவ்வார இறுதியில் மத்திய அரசு அறிவிக்கிறது.

இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் 2 பேர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

4-ம் கட்ட தளர்வின்போது, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அந்தந்த மாநில அரசுகள், அங்குள்ள கொரோனா சூழ்நிலையை பொறுத்து, மெட்ரோ ரெயிலை இயக்குவது பற்றி இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

Metro Rail Chennai

பள்ளி, கல்லூரிகளை திறக்க இப்போதைக்கு அனுமதி அளிக்கப்படாது. ஆனால், பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

சினிமா தியேட்டர்களில் சமூக இடைவெளி விட்டு குறைவான பார்வையாளர்களை அனுமதிப்பது தியேட்டர் அதிபர்களுக்கும், சினிமா தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரரீதியாக பலன் அளிக்காது. எனவே, சினிமா தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்.

அரசியல் பொதுக்கூட்டங்கள், சமூக, கலாசார, ஆன்மிக, கல்வி, விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தடை நீடிக்கும். மதுபான பார்களில் மது விற்க அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.

4-ம் கட்ட தளர்வில், எது எதற்கு தடை என்பதை மட்டுமே மத்திய அரசு அறிவிக்கும். மற்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். இருப்பினும், மாநில அரசுகள், கூடுதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்துக்கொள்ளலாம்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செப்டம்பர் 1-ந் தேதி முதல், சினிமா, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளை நடத்த மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து இருந்தது. இது, இணைய தொடர்கள் மற்றும் அனைத்துவகையான படைப்புகள் உள்பட மின்னணு ஊடக நிகழ்ச்சி தயாரிப்புகள் அனைத்துக்கும் பொருந்தும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course