என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு இன்று (08-10-2020) தொடங்கி, இம்மாதம் 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு அக்டோபர் 1-ந்தேதி தொடங்கி, 6-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. சிறப்பு பிரிவில் உள்ள விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 இடங்களில் 277 இடங்களும், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 இடங்களில் 122 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஒதுக்கப்பட்ட 6 ஆயிரத்து 785 இடங்களில் 98 இடங்களும் நிரம்பி உள்ள நிலையில், இந்த சிறப்பு பிரிவில் நிரம்பாத இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும்.

பொதுப்பிரிவு இடத்திற்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை (TNEA) இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு, 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.

அந்த வகையில், தரவரிசையில் 1 முதல் 12 ஆயிரத்து 263 தரவரிசையில் (cut-off 199.667 முதல் 175 வரை) இருக்கும் மாணவர்களுக்கு 8-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரையிலும், 12 ஆயிரத்து 264 முதல் 35 ஆயிரத்து 167 வரையிலான தரவரிசையில் (cut-off 174.75 முதல் 145.5 வரை) உள்ள மாணவர்களுக்கு 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும், 35 ஆயிரத்து 168 முதல் 70 ஆயிரத்து 300 வரையிலான தரவரிசையில்(cut-off 145 முதல் 111.75 வரை) இருப்பவர்களுக்கு 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலும், 70 ஆயிரத்து 301 முதல் 1 லட்சத்து 10 ஆயிரத்து 873 தரவரிசை(cut-off 111.5 முதல் 77.5 வரை) வரையில் உள்ளவர்களுக்கு 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இறுதி ஒதுக்கீடு ஆணையானது, மாணவர்கள் முன்பணம் செலுத்துதல், விருப்ப கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு மற்றும் அதனை இறுதி செய்தல் போன்றவை முடிந்த பின்னர் வழங்கப்படும். தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று; 8-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி நிறைவு பெற உள்ளது.

scroll to top