கடவுளை வழிபட திருத்தணிக்கு செல்வதாக பா.ஜ.க தொண்டர்களுடன் வேனில் புறப்பட்டார் எல்.முருகன்

பா.ஜ.க ஏற்பாடு செய்திருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை நேற்று தடை விதித்தது. நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6 -ஆம் தேதிவரை தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை மேற்கொள்ளப்போவதாக தமிழக பா.ஜ.க அறிவித்திருந்தது. டிசம்பர் 6 -ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், அன்று இசுலாமியர்கள் அந்த தினத்தை துக்க தினமாக வருடந்தோறும் கடைபிடித்து வருவதால், டிசம்பர் 6 – ஆம் தேதி வரை அனுமதி தரக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, போன்ற காட்சிகள் தடை கோரி இருந்தன.

இந்த வேல் யாத்திரையில், பா.ஜ.க-வை சேர்ந்த பல்வேறு தேசிய தலைவர்கள் மற்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர் என பலர் கலந்து கொள்வதாக கட்சி ஊடகங்களில் ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில் நேற்று திடீரென்று தமிழக அரசு, கொரோனா காலம் என்பதால், பெருந்தொடரை கருத்தில் கொண்டு வேல் யாத்திரைக்கு தடை விதிப்பதாக தெரிவித்தது.

BJP Vel Yathirai

இந்நிலையில், இன்று காலை பா.ஜ.க மாநில தலைவர் திரு. எல்.முருகன் அவர்கள் திருத்தணி நோக்கி, திறந்த வேனில் கையசைத்தபடி திருத்தணி நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் கோயம்பேடு பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டு இருந்தது.

கடவுள் முருகனை கும்பிடுவது வழிபாட்டு உரிமை என்பதால் திருத்தணிக்கு புறப்படுகிறேன் என்று எல்.முருகன் கூறினார். உடன் இருந்த திரு. ஹச். ராஜா, வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் செல்வோம் இல்லையேல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தார்.

தற்போது, எல்.முருகனுடன் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல தமிழக காவல்துறை அனுமதியளித்துள்ளது.

scroll to top