நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்.

 

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

     

 

மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் நடிகர் விவேக்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிற்கு பெரும் இழப்பு நேர்ந்துள்ளது.

 

 

நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தனது ஈடு இணையற்ற கலை சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்துக்கு பெருமை சேர்ந்தவர்.  நடிகர் விவேக் மிகவும் எளிமையானவர், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். இவ்வாறு நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் விவேக் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரர் பத்மஸ்ரீ விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களால் சின்னக் கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
 
சிறந்த சுற்றுச் சூழல் ஆர்வலராக பல இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில், “’சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு. வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!” என்று தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டரில், “மாபெரும் கலைஞனே..மனம் உடைந்து போனேன். பெரிய இழப்பு. என்ன நடக்கின்றது?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
“எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்” என்று இயக்குநர் சேரன் தெரிவித்தார்.
“நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
“சமூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக்” என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.
 
“மனிதகுல முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்த நல்ல காரியங்களுக்கும் மிக்க நன்றி” நடிகை நஸ்ரியா தெரிவித்துள்ளார்.
 
“நல்ல மனிதர் விவேக், விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம்” என்று நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் மயில்சாமி, ஆனந்தராஜ், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course