மருதாணி அரைப்போமா?

மருதோன்றி என்பது இந்தியாவின் அழகுக்கலைகளில் ஒன்று. இந்தியாவைப் போன்றே பெர்ஷியா (இரான்), அரேபிய நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. திருமணம் மற்றும் பண்டிகைக்கு பெண்கள் தம் கைகளுக்கு மருதாணி இட்டு அழகுப்படுத்திக் கொள்வது வழக்கம்.

மருதாணி சிவப்பு வெண்டைப்பிஞ்சு போன்ற பெண்களின் விரல்களுக்கு அழகு சேர்க்கிறது என்றால் மிகையாகாது. முகலாய வாடை வீசும் வடக்கத்திய மெஹந்தி டிசைன்கள் தான் இன்றைய டிரெண்ட் என்றாலும், இருபது வருடங்களுக்கு முன் வீட்டு தோட்டத்தில் இருக்கும் மருதாணி மரத்தில் இருந்து இலைகளை பறித்து, அதை அம்மியில் அரைத்து ஐந்தாறு வாலிப பெண்களும் அவர்களுடன் பொடிப்பட்டாளங்களும் சேர்ந்த அரட்டை அடித்துக்கொண்டே விரல்களுக்கு தொப்பி மாட்டும் நிலாக்காலங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த நாள் நினைவுகளாக இருக்கும்.

அடுத்து வரும் விசேஷத்தைப்பொறுத்தே அவர்களது கேலிப்பேச்சுகளும், வெடிச்சிரிப்புகளும், வளையல் சத்தங்களும், இதனைக் கேட்டு மகிழ்ந்த முற்றங்களும், மொட்டை மாடிகளும் இன்று ஏங்கிக் கொண்டு இருக்குமோ என்னவோ?

தீபாவளி முந்திய இரவு

ஐப்பசி அடை மழைக்குளிர், ஆங்காங்கே வெடிக்கும் பட்டாசு சத்தம், அதனால் வரும் புகை, அடுக்களையில் இருந்து வரும் பலகார வாடை, சுடச்சுட ருசிப்பார்க்கும் அனுபவம், இதில் கும்பலாக அமர்ந்து மருதாணி இடும் வைபவம்.

வீட்டுக்குள்ளே மினி ஹாஸ்டல் நடத்தும் அளவுக்கு மக்கள் செல்வம் பெருகி இருந்த காலம் என்பதால் கலகலப்புக்கு பஞ்சமா? இதில் உறவுகளின் வாரிசுகளின் ஐக்கியம் வேறு. இத்தன்னை கொண்டாட்டங்களும் இன்றைய பிள்ளைகளுக்கு கொடுக்க தவறிய குற்றவுணர்வு இல்லாத ஒன்றைப் பிள்ளைகளின் பெற்றோர் அரிது தான்.

மருதாணி அரைக்கும் படலம்

பறித்த மருதாணிகளை ஈர்க்கு நீக்கி, இலைகளை மட்டும் எடுத்து யூகலிப்டஸ் எண்ணெய், தேயிலை, அமிர்தாஞ்சன் என்று யார்யார் டிப்ஸ் கொடுத்தாலும் அதைக்கேட்டு மைப்போல அரைக்கும் பூவையர், அம்மிக்கல்லை சரியாக கழுவாமல் அம்மாவிடம் “அன்புமொழிகள்”, கேட்ட நாட்கள் திரும்பி வாரா! சொல் பொறுக்காத இன்றைய பிள்ளைகளை நினைத்தால் தோன்றும், “அப்ப நமக்கெல்லாம் எருமத்தோலா? இல்லை பொறுமைச்சாலிகளா?”, என்று சந்தேகம் அடிக்கடி தோன்றும்.

மருதாணி சிவப்பு

காலையில் எழுந்து மருதாணி கைகளை கழுவி யாருக்கு அதிகம் சிவந்துள்ளது எனப்பார்க்கும் போட்டி. பித்தம் அதிகம் உள்ள உடல்வாகுக்கு கருஞ்சிவப்பு, சிலருக்கு இளஞ்சிவப்பு, இன்னும் சிலருக்கு செம்பருத்தி சிவப்பு என்று ஒரே மருதாணி கலவை ஆனால் ரிசல்ட் வேற வேற .

மருதாணி நன்கு சிவந்தால் வரப்போகும் மாப்பிள்ளை ரொம்ப ஆசையாக இருப்பார் என்ற கேலிப் பேச்சில் வெட்கிச்சிவக்கும் தாவணிப்பறவைகள். இப்போது அந்த இளங்கிளிகளின் முகத்தில் அப்பியிருக்கும் மருதாணி சிவப்பு.

தொழில்நுட்பங்கள் ஆக்ரமிக்காத காலம் என்பதால் அன்றைய அரை மணி நேர நிகழ்வு பற்றி இன்று நினைத்தால் கூட இனிக்கிறது. அன்றைய மருதாணி நினைவுகள் கூட சிவக்கிறது.


Marudhani/Henna Paste is made using the leaves of henna plant. Grind leaves using mixer or grindstone by adding water to make paste. It is applied on hands before celebrations or festive occasions. There are some traditional maruthani patterns/designs followed till now. Health benefits of henna include its ability to relieve headaches, detoxify the body, improve nails, protect the skin, boost hair health, cool the body, reduce inflammation, and speed healing.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas